SC NO : 28
அக்ரி பெண்கள் ஒரு தோட்டத்தில் நின்றிருப்பதை சாலையில் வந்து கொண்டிருந்த மாணிக்கம் பார்த்து மரத்தில் சாய்ந்து நின்று கொள்வது! பெண்கள் யாரது? என்று பார்த்து விட்டு அவர்கள் வேலையில் இருப்பது! கலையரசி தன் செல்ப்போனை எடுத்து மாணிக்கத்தை அழைப்பது!
மாணிக்கம் : ஹலோ!
கலையரசி : என்ன இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க? எங்களுக்கு காவலா?
மாணிக்கம் : மனசே சரியில்லங்க கலையரசி!
கலையரசி : எனக்கும் தான் மனசே சரியில்ல!
மாணிக்கம் : இன்னிக்கி சாயந்திரம் நீங்க போயிடுவீங்கன்னு அம்மா சொன்னாங்க!
கலையரசி : அங்கியே இருங்க நான் வர்றேன்!
CUT SHOT
கலையரசி மாணிக்கத்தின் அருகில் வருவது! அமர்வதற்கு வாகான இடம் பார்த்து இருவரும் அமர்வது!
மாணிக்கம் : நீங்க இன்னிக்கி எங்க ஊரை விட்டு கிளம்பிட்டீங்கன்னா மறுபடி உங்களை பாக்கவே முடியாதுல்ல?
கலையரசி : யார் சொன்னது அப்படி? நீங்க என்னமோ மனசுல வச்சுட்டு என்கிட்ட சொல்ல தயங்குறீங்க!
மாணிக்கம் : அன்னிக்கி மண்டபத்துக்கு போயிட்டு ஜீப்ல வந்தோம்ல!
கலையரசி : ஆமா! வந்தோம்!
மாணிக்கம் : என்னையாட்டவே வார்த்தை வராம என்னைப் பார்த்து சொன்னீங்கள்ள கலையரசி!
கலையரசி : ஆமா சொன்னேன்! நீங்க சொன்னதை தான் சொன்னேன்!
மாணிக்கம் : நான் சொன்னது…
கலையரசி : சொல்லுங்க!
மாணிக்கம் : உங்களை கட்டிக்கப் போறேன்! ரெண்டு பாப்பா வேணும் அப்படின்னு!
கலையரசி : நானும் உங்களைப்பார்த்து அதைத்தான் சொன்னேன்!
மாணிக்கம் : என்னமோ தெரியில இன்னிக்கி ஊருக்கு நீங்க போறீங்கன்னு தெரிஞ்சதுல இருந்து மனசு ரொம்ப சங்கடமா இருக்குங்க கலை!
கலையரசி : சரி என்ன பண்ணலாம் அதுக்கு? ஒரு முத்தம் குடுத்தா உங்க சங்கடம் தீர்ந்துடுமா?
மாணிக்கம் : முத்தமா? அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்!
கலையரசி : அய்யே! இந்த வசனமெல்லாம் நாங்க சொல்லணும்! (மாணிக்கம் கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொள்ளுதல்)
மாணிக்கம் : கலை! உங்களுக்கு எங்க வீட்டுல எல்லோரையும் பிடிச்சிருக்கா?
கலையரசி : இந்த வாங்க போங்கன்னு சொல்றதை விடுங்க மாணிக்கம்! உங்க வீட்டுல எல்லாரையும் விட உங்களைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்!
மாணிக்கம் : உங்க வீட்டுல எனக்கு வில்லன் யாராச்சும் இருக்காங்களா?
கலையரசி : வீட்டுல நானும் அம்மா மட்டும் தான்! அப்பா டீச்சரா இருந்து ஹார்ட் அட்டாக்ல இறந்து வருசம் ஆறாயிடுச்சு!
மாணிக்கம் : அப்ப சொந்தத்துல தாய் மாமன், சித்தப்பா, பெரிப்பா பையன்னு யாரு இருந்தாலும் வந்து ஸ்லோமாசன்ல என்னை அட்டாக் பண்ணிவாங்களே! நான் தாங்குவனா?
கலையரசி : அப்படியெல்லாம் யாரும் இல்லை! எல்லாருக்கும் கல்யாணமாயிடுச்சு!
மாணிக்கம் : அப்பும் எங்க ஆத்தா சொல்லிட்டே இருக்கும்!
கலையரசி : என்னான்னு?
மாணிக்கம் : வீட்டுல ரொம்ப ராசிக்காரன் நீதாண்டா! டாப் பிகர் தான் உன்னை லவ் பண்ணி கட்டிக்கப்போகுதுன்னு! (தலையில் கலை கொட்டுதல்)
மாணிக்கம் : என்னை கை விட்டுட மாட்டியே கலை?
கலையரசி : லூசு! (பாய்ந்து கட்டிக் கொள்ளுதல்)
SC NO : 30
பொட்டல் காடு. ரியல் எஸ்டேட் சூட்டிங். (மதிய நேரம்)
காரினுள் பழனி, தம்பி, இருவரும் அமர்ந்திருத்தல்! வெளியே சூட்டிங் நடைபெறுவதற்கான ஏற்பாடு நடப்பது. ஒரு பசுமையான ப்ளக்ஸ் வைக்கப்படுகிறது. ஜீன்ஸ் பேண்ட் டீ சர்ட் கண்ணாடி அணிந்த ஒருத்தி தன் உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசி கண்ணாடியில் பார்த்தல்! முகத்தில் அளவு கடந்த மேக்கப்! கையில் மைக்!
காரினுள் தம்பி : பழனி, அந்த மாணிக்கம் தம்பி வருமா? கோட்டூர்ல எடுக்க வேண்டிய சூட்டிங்கை மாணிக்கத்துக்காக இங்க வந்து எடுக்கிறோம் தெரிஞ்சுக்க!
பழனி : தூண்டிலை வீசிட்டு மீனு கவ்வுற வரைக்கும் காத்துட்டு தான் இருக்கோணுமுண்ண! அவசரப்பட்டா முடியுமா! கண்டிப்பா தகவல் போயிடும், ஆள் வருவான் பாருங்க!
தம்பி : அதா பைக்குல வர்றது உன் மாப்பிள்ளையா பாரு!
பழனி : மாப்பிள்ளையே தான்!
தம்பி : சரியா பேசி அவனை நடிக்க வச்சிடு!
மாணிக்கமும், காளியும் பைக்கில் வந்து மரத்தடியில் நிற்பது!
மாணிக்கம் : நம்ம ஊர்ல நம்மை கேக்காம இங்க இவங்க என்ன மாப்ளை பண்றாங்க? போயி அலம்பல் குடு!
காளி : அதானே! நம்மெல்லாம் பெரிய மனுசன்னு அப்புறம் எதுக்கு ஊர்ல இருக்கோம்? (கேமரா வைத்திருந்தவரிடம் சென்று இரண்டு வார்த்தை பேசி விட்டு வருதல்)
காளி : பங்காளி, ரியல் எஸ்டேட் சூட்டிங் பங்காளி! லோக்கல் டிவில விளம்பரத்துக்காக எடுக்கறாங்களாம்! இங்க நமக்கென்ன வேலை? நம்ம சோலியப் பாக்க போவோம்!
மாணிக்கம் : சூட்டிங்கா? மாப்பிள்ளை வீடா இருந்தா மாப்பிள்ளையா இருக்கோணும், சாவு வீடா இருந்தா பொணமா இருக்கோணும், மொத்தத்துல மாலையும் மரியாதையும் எனக்குத்தான்னு நெப்போலியன் சாரு ஒரு படத்துல வசனம் சொல்வார்ல!
காளி : ஆமா சொல்வாரு! இப்ப அதுக்கென்ன பங்காளி?
மாணிக்கம் : நான் யாரு பங்காளி?
காளி : (ஐய்யோ ஆரம்பிப்பானே) ம்! நீ மாணிக்கம் பங்காளி!
மாணிக்கம் : எனக்கு பொள்ளாச்சியில இன்னொரு பேரும்…
காளி : நான் பாவம் பங்காளி! மேட்டருக்கு வா! இப்ப நாம என்ன பண்ணப்போறோம்?
(காரினுள்)
தம்பி : என்ன பழனி இறங்கி களமாட மாட்டிங்கறாங்க?
பழனி : பொறுமையா இருங்கண்ணா! அங்க பாருங்க! (மாணிக்கம் கேமராக்காரரிடம் வருதல்)
மாணிக்கம் : பாட்டு சீனா சூட் பண்ணப் போறீங்க?
காமராக்காரர் : இல்லீங்ணா, இது ரியல் எஸ்டேட் விளம்பரம்! ஆறு படையப்பா ரியல் எஸ்டேட்காரங்களுது!
காளி : ஏழு படையப்பா, எட்டு படையப்பா யாருதா இருந்தாலும் எங்க அனுமதி சீட்டு வாங்காம எங்கூர்ல சூட்டிங் நடத்த முடியாது!
கேமராக்காரர் : ஓ! நீங்க அந்த கோஸ்ட்டியா?
காளி : பங்காளி, இவனென்ன கோஸ்ட்டிங்கறான்? பசங்களுக்கு போனை போடவா?
காரிலிருந்து பழனி இறங்கி வருதல்.
பழனி : என்ன மாப்ள பிரச்சனை?
மாணிக்கம் : மாம்சு! நீங்க தான் கார்ல இருந்ததா? நீங்க இருந்துமா இப்படி நடக்கோணும் ஊர்ல?
பழனி : என்ன தப்பு மாப்ள நடந்து போச்சு இப்ப?
மாணிக்கம் : ஊருக்குள்ள நான் இருக்கப்ப சத்தமில்லாம மத்தியானம் வந்து சூட்டிங் முடிச்சுட்டு போயிடுவீங்க.. ஏம் மாமா!
பழனி : என்ன மாப்ள சொல்ல வர்றே? புரியற மாதிரி சொல்லு பாக்கலாம்!
மாணிக்கம் : அந்தப்பிள்ளையா நடிக்கப் போவுது?
பழனி : ஆமாம் மாப்ள! சூப்பரா நடிக்கும்! நல்லா பேசும்!
மாணிக்கம் : அப்ப நான் நடிக்க மாட்டேன்னு முடிவு பண்ணிட்டீங்களா?
பழனி : அதுக்கு அனுபவம் வேணும் மாப்ள! சும்மா மைக்க பிடிச்சுட்டு வளவளான்னு பேசி சொதப்பிடக் கூடாது! இடம் விக்கோணுமில்ல!
காளி : அதெல்லாம் எம் பங்காளி பட்டையக் கிளப்புவான்! மைக்கை கையில குடுத்துப் பாருங்க!
பழனி : மாப்ள இப்ப நீ நடிக்கணும், அவ்ளோதானே!
மாணிக்கம் : மாமா இன்னும் மைக்கு கைக்கு வரலை!
பழனி : ஏம்மா இங்க வாம்மா! (அந்தப் பெண் வருதல்! வருகையில் ஒரு மண்டை ஓடு தடுக்கி விழுந்து பேயி! என்று மிரளுதல்!)
பழனி : பயப்படாதம்மா! அது வெறும் மண்டையோடு! இப்பிடி பயப்படுறியே!
(மாணிக்கம் உடைகள் மாறுதல்! கடைசியாக அந்தப் பெண்ணின் முகத்திலிருக்கும் கண்ணாடியை எடுத்து மாணிக்கம் அணிந்து கொள்ளுதல்)
மாணிக்கம் : கொறஞ்ச வெல! கொறஞ்ச வெல! கொறஞ்ச வெல! மனசுக்கு நெறஞ்ச மனை!
அட எங்க கெடைக்குதுன்னு கேக்கறீங்களா? நம்ம ஆறுபடையப்பா ரியல் எஸ்டேட்காரங்க பொள்ளாச்சிக்கி ரொம்ப பக்கத்துல, மெயின் ரோட்டுக்கு கிட்டயே போட்டிருக்காங்க!
அத்தன வசதியும் பக்கத்துலயே இருக்குதுன்னா பார்த்துக்கங்களேன்! ஸ்கூலு வேணுமா? காலேஜூ வேணுமா? வேலைக்கி போக கம்பெனி வேணுமா? எல்லாமெ பக்கத்துலயே இருக்குன்னா பாத்துக்கங்களேன்!
பைப்ப திருவுனா தண்ணி வரும், பயணம் பண்ண பஸ்சு வரும்! பக்கத்துல ஆசுபத்திரியுமிருக்குது! நோயி நொடியின்னா உங்களுக்கு ஒரு பிரச்சனையுமில்ல!
கொறஞ்ச வெல! மனசுக்கு நெறஞ்ச மனை! அதுமில்லாம மொதல்ல வர்றவீங்களுக்கு ஒரு கிராம் தங்கம் வேற இனாமா தர்றாங்க! அது மட்டுமில்லீங்க கிரையச் செலவு இலவசமாமா! பட்டா ஈசி! இனாமா பண்ணித்தர்றாங்க சும்மா! செலவில்லம! அப்புறம் பின்ன என்ன யோசனை! சட்டு புட்டுனு கிளம்புங்க! வாங்க போவோம்….வாங்கப் போவோம்!
காளி வருத்தமாக : வருமைங்கற சூராவளியில சிக்கி நொந்து நூலாயி, காக்கஞ்சியும் அரைக்கஞ்சியும் குடிச்சுட்டு இருக்குற நாமெல்லாம் ஒரு மனை வாங்க முடியுமா? நாப்பதாயிரம், அம்பதாயிரம் ஒரு லச்சமுங்கறாங்க.. அடுத்தவேளை சோத்துக்கே வழியக் காணோம்!நாமெல்லாம் எங்க சொந்தமா எடம் வாங்குறது?
மாணிக்கம் : அட ஏண்டா மங்கி மருகீட்டு இருக்கே? ஒன்னும் வருத்தப்படாதே! கொறஞ்ச வெலையில மனசுகு நெறஞ்ச மனையா நம்ப ஆறுபடையப்பா ரியல் எஸ்டேட்காரங்க பொள்ளாச்சிக்கி பக்கத்துலயே ப்ளாட்டு போட்டிருக்காங்க! தவணை முறையில மெல்ல மெல்லமா கூட வாங்கலாம். மொதல்ல ஒரு டோக்கன் அட்வான்சு போட்டீன்னா போதும்! அதையும் கூடிய சீக்கிரமே செஞ்சுரு! கெரையச் செலவு இலவசம்! தங்கம் வேற ஒருகிராம் தர்றாங்க!
பழனி : மாப்ள! நாங்கூட உன்னை என்னமோன்னு நெனச்சேண்டா! பின்னிட்டே! (கட்டிக் கொள்ளுதல்)
காளி : இதச் சொல்லுங்க! நாங்க பின்னிட்டு நடக்கணும், அதுக்கு பின்னுங்க ரெண்டு பேருக்கும்!
பழனி : இவனை கூட வச்சிருக்காதே மாப்ள! உன் திறமையெல்லாம் வீணாப் போயிடும்! (மாணிக்கம் கண்ணாடியை கழற்றி அந்தப் பெண்ணின் கண்களிலேயே மாட்டி விடுவது! “பேண்ட்டை இவ்ளோ டைட்டா போடக்கூடாது!” சொல்லி விட்டு பழனி பின்னால் செல்வது! காரிலிருந்து தம்பி இறங்கி மாணிக்கத்திற்கு கை கொடுத்து வாழ்த்து சொல்வது! பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுப்பது)
கார் கிளம்பிச் சென்றதும் மாணிக்கமும் காளியும் வண்டியில் கிளம்புவது!
காளி : நேரா எங்க கோயிலுக்கு தான? கோயில் நடைக்கதவு திறந்து மூனு மணி நேரம் ஆச்சு! போயி ரெண்டு தேங்கா ஒடச்சம்னா வாழ்க்கைய எப்படி இனி சிறப்பா நகத்துறதுன்னு திட்டம் போடலாம்!
மாணிக்கம் வண்டியை நிறுத்தி : எப்பிடி பங்காளி இப்படி பொறுப்பா பேசக் கத்துக்கிட்டே! கோயிலுங்கறே.. தேங்காய்ங்கறே!
காளி : கோயில்னா டாஸ்மார்க் பங்காளி ! தேங்காய்னா பீரு பாட்டலு!
மாணிக்கம் : நாம நேரா கிப்ட் ஹவுஸ் போறோம்!
காளி ; எனக்கு கிப்டெல்லாம் வேண்டாம் பங்காளி! காசு இல்லாதப்ப பாதி வெலைக்கி வித்துருவேன்!
மாணிக்கம் ; உனக்கில்ல பங்காளி!
காளி : எனக்கில்லையா? பின்ன யாருக்கு?
மாணிக்கம் : உன் அண்ணிக்கி!
காளி : இன்னிக்கி ஒரு தேங்காயே சந்தேகமாட்டத்தான் இருக்குதே! (முனகுதல்)
-வளரும்