Shahraj Strokes
மதிப்பிற்குரிய ஆடு : வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதை பற்றிய எனது வாசிப்பு அனுபவம்
********************
வா.மு.கோமுவின் ‘நகரில் தனித்தலையும் ஆடு’ சிறுகதையை (அவர் அனுப்பிக் கொடுக்க) முந்தா நாள் இரவுதான் வாசிக்க வாய்த்தது. வாசிக்க வாசிக்கவே நான் அடைந்த மகிழ்ச்சி, உற்சாகம், மன நிறைவுக்கு அளவே இல்லை. நேற்று அவருக்கு அலைபேசி அது குறித்து விரிவாகவே சொல்லி, எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டேன். இப்போது உங்களிடமும் சில முக்கிய தகவல்களை உதிரிகளாக பகிர்ந்துகொள்கிறேன்.
குறிப்பாக இந்தச் சிறுகதை என் போன்ற சக கதையாளக் கற்றுக்குட்டிகளுக்கு மிகவும் பயனளிக்கும். கதையோடிகள் குழுவில் கவியோவியத் தமிழனும் கூட ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அலசல் செய்யலாமே என்று கேட்டிருந்தார். அந்த அளவுக்கு விமர்சன ரீதியாகவோ, ஆய்வு ரீதியாகவோ நான் அணுக முற்படவில்லை. ஆனால் சமகால தமிழ்க் கதை எப்படி இருக்கிறது, இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணங்களில் ஒன்றாக இக் கதையைச் சொல்லலாம். ஒரு மிகச் சாதாரணமான காட்சியிலிருந்து மிகச் சிறந்த கதையை உருவாக்குவது எப்படி என்கிற ரசவாத வித்தையை இளம் படைப்பாளிகளும், என் போன்ற போதாமைப் படைப்பாளிகளும் இக் கதையிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடியும்.
உயிர்மை இதழில் கடந்த ஆண்டு வெளியான இக் கதையின் தலைப்பிலேயே இப்போது கோமுவின் சிறுகதைத் தொகுப்பு வாசகசாலை வெளியீடாக வெளிவந்துள்ளது. விலை: ரூ.130/-
தொகுப்பை நான் இன்னும் முழுதாக வாசிக்கவில்லை. எனக்கு இந்த ஒரு கதையே இப்போதைக்கு நிறைவைத் தந்திருப்பதாலும், அது பற்றி அவசியம் எழுத வேண்டும் என்று பட்டதாலும் இப்போது இப் பதிவு.
கதையைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். முதலாவதும் அடிப்படையுமான விஷயம் அதன் கதை. நகரத்தில் ஒரு ஆடு சுவரொட்டிகளைத் தின்று தீர்க்கிறது. இதுதான் ஒன் லைன். இதை வைத்துக்கொண்டு கோமு என்னவெல்லாம் வித்தை காட்டி, இப்படி ஒரு மாஸ்டர் பீஸைத் தந்திருக்கிறார் என்பது பேராச்சரியம். அதுதான் அவரது மாஸ்டர் மைண்ட்!
கோமுவுக்கு இது சாதாரணம். ஆனால், மற்றவர்களுக்கு அசாதாரணம்.
நகரத்தில் மாடு, ஆடுகள் சுவரொட்டி தின்பதைப் பார்த்திராதவர்கள் யாரேனும் உண்டா கதையாளப் பெருங்கூட்டத்தில்? ஆனால் அந்தக் காட்சியை வைத்துக்கொண்டு இது போன்ற அசாதாரணப் படைப்பைத் தர நம்மில் எவ்வளவு பேரால் இயலும்? நம்மில் ஒருவருக்காவது இது போல தோன்றியிருக்குமா?
கதைச் சுருக்கம் இதுதான்: வளர்ப்போர் இல்லாத ஒரு ஆடு நகரத்தில் (ஈரோடு) சுவரொட்டிகள் முழுதையும் தின்று தீர்ப்பதால் அந் நகரத்தில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன, அது திரையரங்குகள், அரசியல் ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள், அதற்கு சமூகத்திலும் சமூக ஊடகங்களிலும் எந்த மாதிரியான எதிர்வினைகள் ஏற்படுகின்றன, காவல் துறையினர் என்ன செய்ய முற்படுகிறார்கள், இறுதியில் என்ன ஆகிறது என்பதுதான் கதை.
கதை நோக்கம், ஆட்டை முன்வைத்து செய்யப்படும் சமூக, அரசியல் இன்னோரன்ன விமர்சனங்களே! இதற்குள் புக இங்கே இடமும் இல்லை. வாசகர்கள் வாசிக்க வாசிக்கவே அதை அறிந்தும் கொள்ளலாம்.
கதையாக்கம் பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொல்வதெனில் “நவீன செவ்வியல்”! என்னைப் பொறுத்தவரை இது கோமுவின் சிறுகதைகளில் அதி உச்சம்.
கோமுவின் பல கதைகளிலும், கள்ளி போன்ற நாவல்களிலும் தொடக்கப் பகுதி பழைய செவ்வியல் பாணி சித்தரிப்பாக இருப்பதைக் காண்போம். சட்டெனவோ பிறகோ அது மாறி அவரது பொது இயல்புக் கதையெழுத்துத் தன்மைக்கு வந்துவிடும். இக் கதையில் தொடக்கம் முதல் இறுதி வரை செவ்வியல் தன்மை குறைவுபடாமல் தக்க வைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பம்சம். கோமுவின் வழக்கப்படியே இதுவும் வேகமான கதைதான். ஆனால், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு பத்திகளும் சுவை மிக எழுதப்பட்டிருப்பதாலும், நுட்பங்கள் விரவிக் கிடப்பதாலும் ஒவ்வொரு வாக்கியத்தையும் நிறுத்தி நிதானமாக ரசித்து வாசித்தும், மறு வாசிப்பு செய்து ருசித்தும்தான் வாசித்தேன். இதுவரை கோமுவின் கதையை இந்த மாதிரி வாசிக்க நேர்ந்ததே இல்லை. அந்த அளவுக்கு செறிவும் கவித்துவமும் கொண்ட மொழி நடை, பல வகை ஜாலத் தெறிப்புகள்.
இயல்பான கவித்துவ மொழி இக கதையில் பயிலப்பட்டிருப்பது மிக முக்கிய அம்சம். கொள்ளாதவன் வாயில கொளக்கட்டையத் திணிச்சு கொரவளையத் திருகற புனைவு மொழிவாதிகளுக்கு ஹைலி ரெக்கமண்டட்.
இக கதை உடனடியாக எனக்கு பஷீரின் ‘ஃபாத்தும்மாவின் ஆடு’ குறுநாவலை ஞாபகப்படுத்தியது. அக் கதைக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. ஆனால் பஷீரின் நாவல்களிலேயே எனக்கு மிகப் பிடித்தமானது ‘ஃபாத்தும்மாவின் ஆடுதான். வாழ்வின் சாரம் மிக்க பகுதியை அப்படியே துண்டாக வெட்டி எடுத்து வைத்தது போன்ற கச்சிதமான படைப்பு அது. பஷீர் மனப்பிறழ்வுற்றிருந்த சமயம் அதை எழுதி முடித்தார் என்பது நம்பவியலாத ஆச்சரியம் தரக் கூடியதும் கூட.
ஜெயசூர்யா நடிப்பில் மலையாளத்தில் ஆடு என்ற திரைப்படம் இரண்டு பாகங்கள் வந்திருப்பதை தொ.கா. துணுக்குகளில் அறிந்திருக்கிறேன். எனினும் அவற்றைக் கண்டதில்லை.
ஆடு வளர்ப்பு பற்றிய ஒரு பழைய காஷ்மீரச் சிறுகதையையும் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. ஆனால், அது வழக்கமான ஒரு கதைதான். அதைத் தாண்டிய தள நகர்வு அதில் இல்லை. தனக்கான உணவாக சுவரொட்டிகளைத் தேடி நகரில் தனித்தலையும் இந்த தமிழக ஆடு தனது அலைச்சலினூடே பல்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நம்மை நமக்குள் பல் வேறு தளங்களுக்குள்ளாக தனித்து அலைய விடவும் வைக்கிறது. தமிழகத்தின் திரை – அரசியல் பண்பாடு, சுவரொட்டிக் கலாச்சாரம், ஊடக வியாபாரங்கள், போலிச் சமூக அக்கறைகள் முதலானவை நுட்பமாகவும் கூர்மையாகவும் வெளிப்படையாகவும் சாட்டையடியாகவும் விமர்சிக்கப்படுகின்றன. அந்த ஆட்டை வேட்டையாட யாரெல்லமோ முற்படுகிறார்கள். அவற்றிலிருந்து தப்பித்து இறுதியில் மிக இயல்பாக தக்க பாதுகாப்பை ஆடு அடைகிறது; கதையின் அடுத்த காட்சி தொடங்குகிறது.
ஒரு ஆங்கிலத் திரைப்பத்துக்கான கட்டமைப்பை இக் கதையில் நாம் காணலாம். இதைச் சொல்கையில் கோமுவின் முந்தைய ‘கொலைகார ஸ்கூட்டர்’ உடனடி ஞாபகத்துக்கு வருகிறது..
ஃபாத்தும்மாவின் ஆடு போல இந்த ஆடு கதையிலும் பரந்துபட்ட ஒரு முழுமை இருக்கிறது.
நகரில் தனித்தலைகிற அந்த ஆடு உண்மையில் ஆடுதானா, அல்லது குறியீடா? வளர்ப்போரும் மேய்ப்போரும் இல்லாத, சுவரொட்டிகளைத் தின்று வாழும் அந்த ஆடு யார்? மதிப்பிற்குரிய அந்த ஆடு நாமேதான்!
திரை நடிகர்கள் அரசியல்வாதிகளாகி மக்களை ஆளவும் ஆள முற்படவுமாக இருப்பது தமிழக வரலாற்றில் தொன்று தொட்டே நிலவுகிற வழமை. அரசியல்வாதிகளோ மகா நடிகர்களாக இருப்பது உலக வழமை. திரைப்படம், அரசியல் இவ்விரு துறைகளின் ஆதாரங்களில் ஒன்றான சுவரொட்டிகளைத் தின்று வாழ்வது ஒற்றை ஆடோ, நகரத்தில் இருப்பது மட்டுமோ அல்ல. நாட்டு மக்கள் அனைவருமே அந்த ஆடுதான். ‘நானும் கிராமமும்’ (1911) என்ற தலைப்பில் மார்க் சாகல் வரைந்த பிரசித்தி பெற்ற நவீன ஓவியம் எனக்கு நினைவு வருகிறது. கிராமத்தில் ஆடும், ஆட்டுக்குள் ஆடும் இருப்பதைச் சித்தரிப்பதினூடாக ஆட்டுக்குள் கிராமமும் இருப்பதை கோடி காட்டி உணர்த்தும் ஒப்பற்ற ஓவியம் அது. இக் கதையிலும் அப்படித்தான், அந்த ஆட்டுக்குள் நாமெல்லாரும் ஆடுகளாக இருக்கிறோம். நாம் தனித்தலையவில்லை; குழு குழுவாக, கூட்டம் கூட்டமாக, மந்தை மந்தையாக அலைந்துகொண்டிருக்கிறோம், நமக்கான சுவரொட்டிகளை, சின்னங்களை, கொடிகளை, பதாகைகளைத் தேடித் தின்றபடி.